Select Page

“ சாகசம் (வீர, தீர செயல்களை செய்வது) ”

நண்பர்களே, இன்று ஒரு முக்கியமான விஷயத்தைத் தெரிந்துக் கொள்வோம். வாழ்க்கையை எவ்வளவு திடமாக வாழ முடியுமோ, அவ்வளவு திடமாக வாழ வேண்டும். வாழ்க்கையை எவ்வளவு அற்புதமாக வாழ வேண்டுமோ, அவ்வளவு அற்புதமாக வாழ வேண்டும். வாழ்க்கைக்கு தேவையானது உணவு, உடை, உறக்கம் மட்டுமல்ல. இவையனைத்தும் சாதாரண வாழ்க்கை. ரொட்டி மட்டும் தின்று மனிதன் வாழவில்லை என்று ஜீசஸ், பைபிளில் கூறியுள்ளார்.

 

சாகசம் செய்யடா தம்பி

எந்த திரைப்படத்தைப் பார்த்தாலும், அதில் சாகசம் என்பது புலப்படும். சாகசம் இல்லாவிடில்,
அச்சினிமாவை நாம் பார்க்க மாட்டோம். யாரும் அப்படிப்பட்ட சினிமாவை எடுக்க மாட்டார்கள். சாகசமான கதையை சினிமாவாக எடுக்கப்பட்டால் அந்த சாகசத்தை நாம் மகிழ்ச்சியுடன் கண்டு களிப்போம்.

ஒரு சினிமாவில் ஹீரோ, ஹீரோயின் எவ்வாறு சாகசம் செய்வதை நாம் விரும்பி பார்க்கிறோமோ, அதையே வாழ்வில் நாமும் செய்ய முயல வேண்டும். நம்முடைய சொந்த வாழ்வில் நாம் அந்த கதாநாயகன், கதநாயகிப் போல் சாகசத்துடன் இருந்தால்தான் நம் வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும்வாழ்க்கையின் உண்மையான பரிணாம வளர்ச்சியை அடையும்.

4 ரூபாய் சம்பாதித்து, உணவு உண்டு, கல்யாணம் செய்வது, பிள்ளைகளைப் பராமரிப்பது, பின்னர், அவர்கள் பெரியவர்களாகி பிள்ளைகள் பெற்று, வளர்த்து, படித்து, அதைப்பார்த்து நாமும் ‘தாத்தா, பாட்டி’ ஆகிவிட்டோம் எனப் பூரிப்படைவது, வயது ஆகி, இறுதி வாழ்க்கை வாழ்வது… இதில் கூட சாகசம் இல்லாமலில்லை. ஆனால் மிகவும் குறைவான சதவிகிதமே உள்ளது.

 

சாகசத்துடன் கூடிய வாழ்க்கை

சாகசம் என்கிற விஷயத்தைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்வோம். மகாத்மா காந்தி, அன்னை தெரசா போன்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ளும்போது, நமக்கு புல்லரிப்பு ஏற்படுகின்றது. அவர்கள் ‘எவ்வளவு பெரிய பெருந்தன்மை வாய்ந்தவர்கள்’ என எண்ணத் தோன்றும். அவர்கள் கூட சாதாரணமான மனிதர்கள் போல்தான். ஆனால், சாதாரண வாழ்வில் அவர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ளவில்லை.

கிருஷ்ணருக்குக் கூட மனைவிகளும், குழந்தைகளும் இருந்தனர். ஆனால் அவர் ‘யோகிஸ்வரர்’ ஆகிவிட்டார். புத்தருக்குக் கூட மனைவி, மகன் இருந்தனர். அவரும் யோகிஸ்வரர் ஆகிவிட்டார். சிவபெருமானும் மனைவி பிள்ளைகள் உடையவர்தான். அவரும் யோகிஸ்வரர் ஆகிவிட்டார். அதனால் வாழ்க்கை என்றால், சம்சாரம், உடலுறவு, சாப்பாடு, உறக்கம் என்றில்லாமல், சிறிதளவேனும் மகத்துவம் உள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இதற்காக வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும். அதன் பெயர்தான் “சாகசமான வாழ்க்கை”.

‘பிஸ்மில்லாகான்’ சங்கீதத்திற்கு வாழ்வை அர்ப்பணித்தார். ‘பிராட்மேன்’ கிரிகெட்டுக்கு வாழ்வை சமர்ப்பித்தார். எவ்வளவோ ‘ரெக்கார்ட்டுகளை’ உருவாக்கினார். ‘எட்மண்ட் ஹில்லாரி’ எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப் பிடித்தார். இவையனைத்தும் சாதாரணமான காரியங்கள் அல்ல.

 

மன்னன் எப்படியோ அப்படியே மக்கள் 

“பெரிய வேலைகள் செய்வதற்கு நாம் வரவில்லை. சிறிய காரியங்கள் செய்வதற்காகவே நாம் இருக்கின்றோம். நாம் சாதாரண மனிதர்கள் மாத்திரமே. இவையனைத்தும் நம்மால் முடியாது என நினைப்பது, இதையே தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயிருந்து சொல்லித் தருவது, ஏதோ படித்து, வேலை பெற்று, மனைவி, மக்களைப் பராமரிப்பது, இதுதான் வாழ்க்கை எனும் எண்ணத்தை அவர்களுக்குள் விதைத்து, நம் வாழ்க்கையை ஒரு சிறு வட்டத்திற்குள்ளேயே கட்டி விடுகிறோம். “யதா ராஜா, ததா ப்ரஜா” பெற்றோர் எவ்வழியோ, அது போலவே பிள்ளைகளும் நகலாக இருந்து விடுகிறார்கள்.

உள்ளுக்குள் அனைவருக்கும் சாதனையாளர்களாக ஆக வேண்டும் என்றுதான் இருக்கும். ஆனால் தாய், தந்தை, உறவினர்கள் அனைவரும் பயத்தையே போதிப்பார்கள். பயத்திலேயே வாழ்வார்கள். “இவையனைத்தும் பெரிய விஷயங்கள். உன்னால் முடியாது, புலியைப் பார்த்து நரி சூடு போட்டுக் கொண்டது போல, நீயும் இருக்காதே” என்று கூறுவர்.

இவ்வறே சாகசம் வேண்டும் என்று நினைப்பவர்களைக் கூட பயம்காட்டி, தன்னம்பிக்கையை தண்ணீர் தெளித்து அழித்துவிடச் செய்வது, பிள்ளைகளுக்கு நல்லதை போதிப்பதாக எண்ணுவர் பலர்.

 

சமுதாயத்திற்கு சிறிதேனும் நல்லது செய்வது சாலச்சிறந்தது

ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், சாகசத்துக்காகத்தான், நாம் பிறந்துள்ளோம் என்பது பயந்து வாழ்வதற்காக எந்த மனிதனும் பிறக்கவில்லை. ஏதோ ஒரு உன்னதமான செயலை செய்வதற்காகவே ஒவ்வொரு மனிதனும் பிறந்துள்ளான். எந்த மனிதனும் சாப்பிட்டுத் தூங்குவதற்காக மட்டும் பிறக்கவில்லை. சமுதாயத்தின் மேல் சார்ந்து வாழ்ந்த போதிலும், சிறிதளவேனும் சமுதாயத்திற்கு நல்லது செய்வதற்காகவே பிறந்துள்ளான். அதன் பெயர்தான் சாகசம்.

மற்றவர்களூக்கு சிறப்பாக ஏதேனும் நல்லது செய்வதுதான் சாகசம். உங்கள் பெற்றோர் உங்களை பெற்றெடுத்தாற்போல் நீங்களும் பிள்ளையைப் பெற்றெடுத்தால் சமூகத்திற்கு நன்மை செய்ததாக ஆகாது. ஒரு யேசுநாதர் சமூதாயத்திற்கு கொடுத்தது எவ்வளவு? எடுத்துக் கொண்டது எவ்வளவு? ஒரு காந்திஜி, பிஸ்மில்லாகான் போன்றோர் சமுதயத்திடம் பெற்றுக் கொண்டது எவ்வளவு? கொடுத்தது எவ்வளவு? இவர்கள் வாழ்க்கையன்றோ சாகச வாழ்க்கை?

 

ஆன்மாவின் கோரிக்கை எப்போழுதுமே சாகச வாழ்க்கைதான்

சுற்றியுள்ள சாமான்யர்கள் என்ன செய்வார்களோ, அதைப் பார்த்து நாமும் செய்வது எப்படி
சாகசம் ஆகும்? எவரும் செய்யாததை நாம் செய்வது தான் சாகசம். சாகசத்தில் வாழ்வது தான் உண்மையான வாழ்க்கை. சாகசமில்லாமல் வாழ்வது என்பது நடைபிணம் போலாகிவிடுமே தவிர வாழ்க்கை வாழ்வது என்று ஆகாது.

ஆன்மாவின் கோரிக்கை எப்பொழுதுமே சாகசம்தான். உடலின் கோரிக்கை எப்பொழுதுமே பசியாறுவதுதான். ‘நான் உடல்’ எனக் கருதினால், பசியை தீர்ப்பதற்காகவே வாழ்கிறோம். ஆனால், “நான் ஆன்மா” என்று தெரிந்தபின் சாகசம் செய்வதற்காகவே முயற்சி செய்வோம். அப்பொழுது சாகசகாரர்களாக மாறிவிடுவோம்.

‘நான் ஆன்மா’ என்பது தெரியாமல், நான் என்பது என் உடல் மட்டுமே என்று எண்ணுபவர்கள் சிலர் செய்யும் சாதனை மிக மிகப் பெரியது. உயிரைக்கூட துச்சமாகக் கருதுவர்கள். ஆனால், ‘ஆன்ம சொருபமாக’ வாழ்பவர்கள், சாகசம் செய்வது மிகச் சாதாரணமான விஷயம். ஆன்மா, சாகசத்தை இயல்பாகவே செய்யத்தூண்டி சாதனையாளர்களாக மாற்றுகிறது. எவர்கள் ஆன்ம தத்துவத்தில் நுழைந்து விட்டார்களோ, அவர்கள் வாழ்வில் சாகசம் என்பது அன்றாட வாழ்வில் இயல்பாக ஏற்பட்டுவிடும். ‘சாகசம்’ சகஜமானதாகிவிடும்.

நண்பர்களே, ஆத்மஞானம் இல்லாத சமயத்தில் செய்யும் சாகசம் விசெஷமான சாகசம். ஆனால் ஆத்மஞானம் தெரிந்தபின் செய்யும் சாகசம் ஆத்மஞானம் உள்ளவர்கள் அனைவருக்கும் சாதாரணமான விஷயம்.

 

சிறுவயதிலிருந்தே கற்பிக்க வேண்டும்

சாகசத்தை சிறுவயதிலிருந்து குழந்தைகளுக்குக் கற்றுத் தர வேண்டும். ‘இருட்டில் பேய், பிசாசு இருக்கும், போகாதே’ என்று சொல்லாமல், ‘தனியாக இருட்டில் சென்று வா’ என்று கூற வேண்டும். சுடுகாட்டிற்கு கூட அழைத்துச் செல்ல வேண்டும். ‘இங்குதான் தாத்தா உடலை நீக்கினார்’, என சொல்லி மயானம் மீதுள்ள பயத்தைப் போக்க வேண்டும்.

‘அதுபோலவே, ஆற்றில் நீந்திவா’ என்று கூறி, அவர்களுடனேயே இருந்து, ஜாக்கிரதையைப் பற்றியும் கூறி, சாகசத்தை கற்றுத் தர வேண்டும்.

 

விதவிதமான சாகசங்கள்

சாகசம் விதவிதமாக இருக்கும். படிப்பில் சாகசம், விளையாட்டில் சாகசம், சங்கீதத்தில் சாகசம். ஒரு புது ராகத்தை கண்டுபிடிக்கலாம், இரண்டு ராகத்தை சேர்த்தால் புது ராகம் வரும். புது ராகத்திற்கு ஒரு கீர்த்தனையை எழுதி ஆலோசனை செய்தல், ஒரு கட்டுரை எழுதி பத்திரிக்கைக்கு அனுப்புதல் போன்றவை சில.

அக்கம் பக்கத்தினர் செய்யாததை நாம் செய்வதுதான் சாகசம். இதுற்குமுன் செய்யாததை புதிதாக செய்வது தான் சாகசம். உயிருக்கு துணிந்து செய்வதுதான் சாகசம். மற்றவர்களின் கேலிப் பேச்சை பொருட்படுத்தாமல் நம் முயற்சியை தொடர்வதே சாகசம்.

உடலுக்கு காயம் ஏற்படுமோ, கால் கை உடையுமோ, என்று பயப்படாமல் முன்னோக்கி செல்வதே சாகசம். மற்றவர்களின் கேலியை கண்டுகொள்ளாமல், ஆன்மாவிற்கு தோன்றியதை ஏற்று, இதய பூர்வமாக தொடர்ந்து முயற்சி செய்வதே சாகசம்.

எப்போழுதுமே சமையல் செய்யாதவன் சமையல் செய்வது தான் சாகசம். தனகென்று இல்லாமல் மற்றவர்களுக்கு உதவி செய்வது சாகசம். வயதான காலத்தில் கூட அவரவர் வேலையை அவரவரே செய்து கொள்வது சாகசம். சிறுவர்கள், அவர்கள் வேலையை அவர்களே செய்வது சாகசம்.

 

சாகசம் ஒரு தூண்டுதல்

ஒருவரது சாகசத்தைப் பார்த்து இன்னொருவர் செய்வார். ஒருவரின் சாகசம் இன்னொருவருக்கு ஊக்கத்தை அளிக்கும். காந்திஜியின் சாகசத்துடன் தேசம் முழுவதும் சாகசமாகிவிட்டது. எல்லோரும் அவரைப் போல் சாகசம் செய்து பாரத தேசத்திற்கு விடுதலையை வாங்கித் தந்தார்கள். ஒரு நெல்சன் மன்டேலாவின் சாகசத்தைப் பார்த்தால் 20 வருடங்களாக ஜெயிலில் இருந்தாலும் தன்னுடைய சாகசத்தை இழந்துவிட்டாரா என்ன? ‘வீர் சர்வர்கர்’ எவ்வளவு சாகசகாரர்?. – அந்தமான் சிறையில் 25 வருடங்கள் எத்தனையோ இன்னல்களை அனுபவித்தார். ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் நம் சாகசத்தைப் பார்க்க யாரும் இருக்க மாட்டார்கள். சாகசம் முடிந்த பின்னர் வாழ்வின் இறுதியில் தான் பாராட்டுவார்கள்.

 

சாகசம் தனிப்பட்ட விஷயம்

யாரோ பார்ப்பார்கள் என்பதற்காக நாம் சாகசம் செய்வதில்லை. எல்லோரும் பார்ப்பதற்காக சாகசம் இருக்காது. சாகசம் தனிபட்ட விஷயமாகும். அது மற்றவர்களிடம் காண்பிப்பதற்காக இருக்காது. சாகசம் என்பது உன்னதமான மனிதனின் உன்னதமான ஆவல்.

வாழ்க்கை என்பது சாகசத்தோடு நிரப்பப்பட்டு இருக்க வேண்டும் என்பதை எப்போழுதுமே பெற்றோர் பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டும். அவர்கள் சாகசத்தில் சாதனை புரிந்தவர்களாக இருந்தால்தான் பிள்ளைகளுக்கு அவ்வாறு கூறமுடியும்.

எப்படி ‘நல்லது’ என்பது கெட்டதை செய்யாமலிருப்பதின் மூலம் வருமோ, எப்படி ஞானம் என்பது அஞ்ஞானத்தை நீக்குவதின் மூலம் வருமோ, அப்படி சாகசம் என்பதும் பயம் என்பதை நீக்கி விட்டால்தான் நடக்கும். ஞானத்துடன் கூடிய சாகச வாழ்க்கையே பரிபூர்ண வாழ்க்கை. நல்லது செய்வது, சாகசமாக வாழ்வது, ஞானம் பெறுவது, இதுதான் பரிபூர்ண வாழ்வின் உன்னதமான உண்மைத் தத்துவம்.

 

சாகசமான சோதனை

நல்லதை செய், கெட்டதை செய்யாதே, அஞ்ஞானத்தை விட்டு ஞானத்தை அடைய வேண்டும் என்று எல்லோரும் கூறுவர். ஆனால் “சாகசம் செய்” என்று மிகவும் குறைவானவர்கள்தான் கூறுவார்கள். ‘உயிர் போனால் போகட்டும், இந்த வேலையை செய்” என்று யாராவது கூறுவார்களா? இவ்விதமாகக் கூறினால், இது சாகசமான போதனை, சாகசமான காரியம். சாகசத்தைப் போத்திப்பதுதான் சாகசமான போதனை.

 

யுத்தாய க்ருத நிஸ்ச்சயஹ: (யுத்தம் செய்யத் தயாராகிவிடு)

“யுத்தாய க்ருத நிஸ்ச்சயஹ” என்று பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார். அது சாகசத்தை போதிக்கும் உபதேசம். பல காரணங்களால், ‘யுத்தம் செய்ய மாட்டேன்’ என்று கூறிய அர்ஜுனனை ஸ்ரீ கிருஷ்ணர், ‘யுத்தம் செய்’ என்று கூறினார்.

துரியோதனன் கூட “ஜானாமி தர்மஹ ந-ச்-ச-மே ப்ரவருதிகி, ஜானாமி அதர்ஹ ந-ச்-ச-மே நிவ்ருதிஹி” என்றான் – “எனக்கு தர்மம் என்னவென்று தெரியும். ஆனால் அதை செய்ய வேண்டும் என்று ஆவல் இல்லை. அதர்மம் என்னவென்றும் தெரியும் அதையே செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது” என்றான். இதுவே சாகசம். துரியோதனன் உயிருக்குத் துணிந்தவன். உன்னைக் கொல்ல வேண்டும் என்பதே என் கோரிக்கை. இது எனக்கு மரணத்தை உண்டாக்கும் என்று தெரியும். இது கெட்டதுதான் ஆனால் சாகசமான காரியம்.

சாகசத்திற்கு மேலுலகத்தில் எத்தனையோ மதிப்பெண்கள் கிடைக்கும். இன்றோ, நாளையோ நாமும் மேல் உலகுக்குச் செல்வோம். அங்கு அவர்கள் நம்மைக் கேட்பார்கள். பூமியில் வாழும்போழுது, ஏன் சாகசம் செய்யவில்லை? ஏன் பயத்திற்கு அடிமையாகிவிட்டாய்? அப்பொழுது நாம் எந்த முகத்துடன் இருப்போம்? மனைவி, மக்கள், பொறுப்பு என்றெல்லாம் சமாளிக்க மனது வராது. ஏன் என்றால் அதே போன்ற நிலையில் இருந்த எத்தனையோ பேர் நிறைய சாகசக் காரியங்களை பூலோகத்தில் செய்தது தெரியும்.

 

செல் – முன்னேறிச் செல்

மேல் உலகவாசிகளுடைய ஒரே தகவல், “சாகசம் செய்யணும் தம்பி – செல் முன்னேறிச் செல்”.

ஸ்ரீ ராமர், “அக்னி பிரவேசம் செய்” என்றபோது, சீதா தேவி உடனே செய்தார். அதுதான் சாகசம். வீட்டிலிருந்து வெளியில் அனுப்பப்பட்ட கர்ப்பிணியான சீதை, இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்து ஆசிரமத்திலிருந்தே வளர்த்தது, சாகசமான விஷயம். “நீ காட்டுக்குப்போ” என்று தசரதர் கூறியதும் 14 வருடங்கள் சந்தோஷமாக ராமர் சென்றுவிட்டார். இது சாகசமான காரியம். ராவணன் சீதையை கொண்டு சென்றது கூட சாகசமான காரியம்தான். ராவணனுக்குத் தெரியும், ராமன் தன்னைக் கொல்வார் என்று. தெரிந்தும் செய்ததுதான் சாகசம்.

 

தியானம் அனைத்தையும் விட மகத்தான சாகசம்

பூலோகத்தில் தியானம் செய்வது என்பது எல்லாவற்றையும்விட பெரிய சாகசம். மனதை அமைதிப்படுத்துவது எல்லாவற்றையும் விட மிகப்பெரிய சாகசம். மூன்றாம் கண்ணைப் பெறுவது, கடந்த பிறவியைப் பார்த்தல் எல்லாவற்றையும் விடப் பெரிய சாகசம். தியானம் என்ற மகத்துவமான காரியத்தைத் துவங்குவோம்.

உலகம் சொல்லும், “சின்ன வயதில் ஏன் தியானம், வயதான பிறகு செய்துகொள்” என்று. சிறுவயதிலேயே ரமண மகரிஷி எவ்வளவு தியானமும் சாகசமும் செய்தார் தெரியுமா?

நம் வாழ்வு நமக்கே ரசிப்புடன் இருக்க வேண்டுமானால், இறந்த பின்னர் மேல் உலகத்திலிருந்து நம் வாழ்வை திரும்பிப் பார்க்கையில், அது நம்க்கு உற்சாகமூட்டுவதாக இருக்க வேண்டுமானால், சாகசம் மிக மிக முக்கியம்.

 

சாகசமான காரியங்கள்

அனைத்திலும் மிகவும் சாகசமான காரியம் தியானம். தினமும் இச்சாகசக் காரியத்தை செய்வோம். தியானம் என்பது மகா சாகசமான விஷயம் என்பதை தெரிந்து கொண்டால்தான் அதனுள் நாம் அழகாக மூழ்கிவிட இயலும். முதலைகள் கூடிய ஏரியில் நாம் இறங்குவதுதான் ‘தியானம் செய்வது’ என்பது.

 

சாதாரணமான விஷயம் கிடையாது

தியானம் என்பது சாதாரண விஷயம் அல்ல. நம் மனதை வெற்றிடமாக்குதவற்காகச்செல்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டு நம் கண்கள் இரண்டையும் மூடிக்கொள்ள வேண்டும். தியானம் என்பது விளையாட்டு அல்ல. தியானம் என்பது முழுவதுமாக நாம் நம்மைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவற்றைத் தெரிவிக்கும் அற்புதமான விஷயம். மிகவும் முக்கியமான சாகசம் ‘தியானம்’.

 

பாலத்தைக் கட்டி – ராவணனை கொன்று – சீதையைக் கொண்டு வா

புத்தர் கூறிய “சுவாசத்தின் மீது கவனம்” என்கிற தியானத்தினால் இந்த சாகச வேலை ஆரம்பமாகிறது. தேவையற்ற திந்தனைகளை நீக்க வேண்டும். உடலைக் கட்டி மனதை சூன்யமாக்கி, ஞானக்கண் என்கிற சாகச பலனை வெளிக்கொணர வேண்டும்.

உடலைக் கட்டி, மனதை இல்லாமல் செய்வது என்பது மகா சாகசமான காரியம். அப்பொழுதுதான் சாகசத்தின் பலனைப் பெறுவோம். “கட்டி, கொன்று, கொண்டு வா” என்பது வால்மிகி மகரிஷி நமக்கு கொடுத்த சாகசமான காரியம். இதன் பெயர் ‘ஆன்மாயணம்’. ஆன்மாவைப் பெறும் காரியம். உடலைக் கட்டி, மனதைக் கொன்று ஆன்மாவை உயரச் செய்வதே மகா சாகசமான காரியம்.

 

வெடிகுண்டு வீசுவது சுலபம்

மற்றவர்களைக் கொல்வது சாகசம் அல்ல. கொல்வது மிகவும் சுலபம். வெடிகுண்டு வீசுவது மிகவும் சுலபம். நம் மனதைக் கொல்வதுதான் சாகசம்.

மணிக்கணக்கில் பொறுமையாக உட்காருவதுதான் சாகசம். ஒரு கத்தியில் ஒருவரைக் குத்துவது சாகசமே அல்ல. ஒரு துப்பாக்கியால், தூரத்தில் இருந்து ஒரு மனிதனைக் கொல்வது என்பது சாகசமே கிடையாது. கண்களை மூடி, உடலை நிலையாக வைத்து, மனதை சூன்யமாக வைத்திருப்பது, திவ்யதிருஷ்டியை வெளிப்படுத்தி ஆன்மாவை அடைவதுதான் உத்தமமான – சாகச காரியம்.

 

வெற்றி – தோல்வி இவற்றுடன் சம்பந்தமில்லை

மற்றவர்களை கணக்கிடாமல் நாம் தேர்ந்தெடுத்த வேலையில், மனஒருமைப்பாட்டுடன் செயல்புரிவதுதான் ஒரு சாகசனின் பணி, ஒரு மாஸ்டரின் லட்சியம். சாகசத்திற்கு வெற்றி – தோல்வியுடன் சம்பந்தமில்லை. மாஸ்டர்கள் அனைவரும் சாகசத்தைப் பயிற்சி செய்வார்கள். மற்றவர்களுக்காக மாஸ்டர்கள் வாழ்வதில்லை. தமக்காக, தாம் வாழ்கிறார்கள். சாகசத்தை விரும்புபவர்கள் சாகசத்திலேயே வாழ்வார்கள். வெற்றியா? தோல்வியா? இதனுடன் எந்த சம்பந்தமும் கிடையாது. பலன் வருமா? வராதா? சாகசத்திற்கும் இவற்றிற்கும் சம்பந்தம் கிடையாது. சாகசம் புரிபவருக்கு, சாகசத்துடன் தான் சம்பந்தம்.

நண்பர்களே, சாகசத்திலே சாகசம் தியானம். ‘சாகசத்தின்’ பெயரே ‘தியானம்’ தியானத்தின் பெயரே சாகசம். சாகசம் ‘பசுபதி’ வாழ்க்கை. சாகசம் இல்லாமலிருப்பது ‘பசுவின்’ (விலங்கின்) வாழ்க்கை. பசுவிற்கும், பசுபதிக்கும் உள்ள வேறுபாடு தான் சாகசம்.

 

தியானத்தில் கூட பயமா?

சுவாசத்தை கவனிப்பதின் மூலமாக மனம் வெற்றிடமாகிவிடும். பயந்தால் சாகசமில்லை. எங்கேயோ பள்ளத்தில் விழுவதுபோல் இருக்கும். எங்கேயோ ஆகாயத்தில் பறப்பதுபோல் இருக்கும். இது போன்றவற்றிற்கு பயந்தால் சாகசம் இல்லை. எதற்கு பயம்? தியானத்தில் முன்னேறிச் சென்று, பயத்தை நீக்கிவிட்டால், சாகசமின்மை என்பது சாகசமாக மாறிவிடும். தியானத்துடன் நாம் சாகசமாக ஆகிவிடுவோம். தியானத்திலிருந்து வெளியே வந்தபிறகு சாகசத்துடன் வாழ்வோம். சாகசத்துடன் ஆன்மா முன்னேறி வரும். சாகசமின்மையினால் பயத்துடன், ஆன்மா பின்னோக்கிச் சென்றுவிடும். நாம் உடலில்லை, ஆன்மா. ஆன்மா என்பது சாகசத்துடன் தான் உன்னத நிலைக்கு பயணிக்கும்.

 

சாகசத்துக்கு சலாம்

சாகச காரியம் தினமும் தொடர வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும் சாகசமான காரியத்தை – இந்த தியான காரியத்தை – பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டும். இது பெற்றோரின் கடமை. எப்பொழுது, “நாம் உடலல்ல ஆன்மா” என அறிந்து கொள்கிறோமோ, அப்பொழுது, சாகசம் சகஜமாகிவிடும். இதைத் தெரிந்து கொண்டால், சாகசம் ஒரு இயற்கையான பயிற்சியாகிவிடும். உடல் தற்காலிகமானது. ஆன்மா என்றென்றும் நிலைத்திருப்பது என்பதை தெரிந்து கொண்டால், சாகசம் ஒரு அக்கறையுண்டாக்கும் காரியமாக மாறிவிடும். சாகசத்திற்கு நம்முடைய சலாம்.

சாகசத்திற்கு நம் வாழ்த்துக்கள். சாகசம் செய்தவர்களுக்கும், சாகசம் செய்கிறவர்களுக்கும் அனைவருக்கும் நம்ஸ்கார புஷ்பாஞ்சலி.