Select Page

“ மைத்ரேய புத்தா பிரமிட் ”

பெங்களூரின் ஏழு அதிசயங்களில் ஒன்று

ஒரு பிரமிடினுள் வியக்கத்தக்க ஆற்றல் இருக்கின்றது.

பெங்களூரிலிருந்து 40 கி.மீ. தூரத்தில், கனகபுரா சாலையில் கற்குன்றுகளுக்கு இடையில், பசுமையான பள்ளத்தாக்கில் “மைத்ரேய புத்தா பிரமிட்” அமைந்துள்ளது. தற்சமயம் தியானத்திற்கான பிரமிட்களில், உலகிலேயே மிகப்பெரிய பிரமிட் இதுதான்.

ஒரே சமயத்தில் ஏறக்குறைய 5000 பேர் அமர்ந்து தியானம் செய்யும் அளவிற்கு, 102 அடி உயரமும் 160 x 160′ சதுரஅடி பரப்பளவுடைய அடித்தளத்தையும் கொண்டுள்ளது. இது “பிரமிட் ஸ்பிரிசுவல் சொசைட்டி மூவ்மென்ட்” (PSSM) ஆல் நிறுவப்பட்டுள்ளது. இது பிரமிட் ஸ்பிரிசுவல் டிரஸ்டின் அங்கமாகும். இந்நிறுவனம் சமயசார்பற்ற, லாபநோக்கிமில்லாத, தன்னார்வத் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட ஆன்மிக நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் ஒரே நோக்கம் “ஆனாபானசதி” தியானத்தையும், சைவ உணவுக் கொள்கையையும் பரப்புவதாகும்.

இப்பிரமிட் கான்க்ரீட் தளத்தின் மீது, பிரம்மிக்கத்தக்க ஸ்டீல் கம்பிகளால் வடிவமைக்கப்பட்டதாகும். ஸ்டீல் கட்டமைப்பு, 40,000 சிமெண்ட் டைல்ஸ்களால் சுவர் சித்திரங்களாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவை பிரமிடின் வடக்கு திசையிலும். அக்னியை தெற்குத் திசையிலும், பிருத்வியை (மண் அல்லது நிலம்) மேற்குத் திசையிலும், நீரினை கிழக்குத் திசையிலும் சுவர்ச்சித்திர்ரமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பஞ்ச பூதங்களில் ஐந்தாவது தான் ஆகாய தத்துவம் அதாவது ‘வெட்டவெளி – வெற்றிடம்’ எனும் தத்துவம் பிரமிடின் உள்ளே இயற்கையாக அமைந்துள்ளது. தியானத்தில் அமருபவர்கள் மனமும் ஆகாயம்போல் வெற்றிடமாக அமைதி நிலையில் இருக்கும்.

பிரமிடின் தத்துவப்படி, வடக்கு-தெற்கு திசையிலும், நான்கு பக்கங்களின் சாய்வுக் கோணம் 51 டிகிரி 52’மி (Golden Angle of Inlination) இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. பிரமிடுக்குள் உள்ள முக்கியமான, நிறைய ஆற்றல் உள்ள இடத்தை “கிங்ஸ் சேம்பர்” என அழைக்கின்றோம். இது 34 அடி உயர்த்தில் சுருள் வடிவ படிகளோடு அமைக்கப்பட்டுள்ளது. இது வட்டவடிவமாக உள்ளது. இதில் ஒரே நேரத்தில் சுமார் 40 பேர் அமர்ந்து தியானம் செய்யலாம்.

பிரமிட் ஆற்றல் அதிகரிக்கவும், வியக்கத்தக்க ஆன்மிக அனுபவங்களைப் பெறுவதற்காக்வும், இயற்கையான 640 ஹிமாலயன் ஸ்படிகங்கள் பிரமிடினுள் பதிக்கப்பட்டுள்ளன். பிரமிடின் அடித்தளத்தில் உள்ள கீழ் அறையில் புத்தரின் சித்திரம் உள்ளது.

அடித்தளத்தில் உள்ள சன்னல்களின் வழியாக போதுமான அள்விற்கு வெளிச்சம் வரும்படியும், பிரமிடினுள் நுழை வாயிலை அடைய இருபத்தி ஏழு படிகழும் கட்டப்பட்டுள்ளன.

பிரமிடுகள் ஆற்றலை சேமித்து வைக்கும் கொள்கலமாகும். அதன் கணித வடிவமைப்பானது, பிரமிட் பிரபஞ்ச ஆற்றலை சேகரித்து, தக்கவைத்து ஒளிரச் செய்கின்றது.

பிரமிடினுள் அல்லது பிரமிடுக்கு அடியில் அமர்ந்து செய்யும் தியானம் பிரமிட் தியானம் எனப்படும். இவ்வாறு தியானம் செய்யும் பொழுது, சாதாரணமாக அமர்ந்து கிடைக்கும் ஆற்றல் மும்மடங்காக அதிகரிக்கும். பிரமிட் தியானம் மன அழுத்தம் போன்றவற்றை நீக்கி நல்ல உடல் நலத்தை அளிக்கின்றது.