Select Page

“ நானொரு ஆன்மிக அறிவியல் விஞ்ஞானி ”

நான் 1947 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி தெலுங்கானா நிஜாமாபாத் மாவட்டம் போதனில் பிறந்தேன்.

       ‘நம் பிறப்பை நாமே தேர்ந்தெடுக்கிறோம்’ எனும் ஆன்மாவின் விருப்பத்தைப் பொறுத்தே நான் என் தாய், தந்தையார் மற்றும் பிறக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்து – வெவ்வேறு கலாச்சாரங்கள் நிறைந்த போதன் நகரில்  பிறந்தேன்!

       என் வாழ்வின் நிறைய விஷயங்களை என் அம்மா சாவித்திரி தேவியிடமிருந்தே கற்றுக்கொண்டேன். முக்கியமாகத் துக்கங்களைப் புன்னகையுடன் ஏற்றுக் கொள்வதில் அவர் காட்டிய தைரியம் எனக்கு என்றும் எடுத்துக்காட்டாக விளங்கியது. அவர் அவருடைய வாழ்வில் எத்தனையோ துன்பங்களையும், துயரங்களையும், இன்னல்களையும் சந்தித்தார். ஆனாலும் அவர் எந்தக் காலத்திலும் தைரியத்தைக் கைவிடாமல் தன் வாழ்நாள் முழுவதும் இருந்தார்.

        அவர் எப்போதும் வீணாகக் காலம் கழித்ததில்லை. பிள்ளைகளின் பராமரிப்பு, படிப்பு, சங்கீதம் கணவனின் ஆரோக்கியமின்மை, உறவினர்கள்… இப்படி எந்நேரமும் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு வாழ்வின் இன்னல்களை அசாத்தியமாக எதிர்கொண்டார்!

                   வாழ்வில் எத்தனை இன்னல்கள் வந்தாலும் தைரியத்தையும் கைவிடவில்லை; அத்துடன் சேர்ந்து தன் கர்மங்களுக்கு யாரையும் நிந்திக்கவுமில்லை! அக்கம்பக்கத்தாருடனும், நண்பர்களுடனும் நல்ல நப்புடன் இருந்து, தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து மைத்ரேய தத்துவத்துடன் இருந்தார்.

        அவரின் வழிகாட்டுதலுடன் வளர்ந்து வந்த நான், என் அண்ணன் ‘வேணுவினோத்’ உதவியுடன் சங்கீதத்தைக் கற்றேன்.

அதன் பலனாக 1963 லிருந்து 1970 வரை செகந்திராபாத்தில் ‘திரு.டீ.எஸ். சந்திரசேகரன்’ அவர்களிடமிருந்து புல்லாங்குழலையும், 1975 லிருந்து 1978 வரை கர்னூல் ‘பத்மபூஷண்’ டாக்டர். ஸ்ரீபாத பிநாகபாணி அவர்களிடம் கர்நாடக சங்கீத்த்தையும் கற்றுக் கொண்டேன்.

      என் ஆரம்ப நடுநிலைக் கல்வி போதனிலும், உயர்நிலை B.Sc. பட்டப்படிப்பு செகந்திராபாத்திலும் முடிந்தது. 1966-1970ல் B.Sc. (Agriculture), 1970-1974 ஆண்டுகளில் M.Sc. (Agriculture) முடித்தேன். அதே நேரத்தில் ஹைதராபாத்தின் ’இந்தியா கவுன்சில் ஆஃப் அக்ரிகல்சுரல் ரிசர்ச்சில்’ ஒரு வருடம் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்தேன்.

     1970இல் வருமானவரித்துறை ஆய்வாளராகத் தெனாலியில் பணிபுரிந்தேன். அதன்பின் ‘கொரமண்டல் பெர்டிலைசர் லிமிடெட்’ல் 1975லிருந்து 1992 வரை சேல்ஸ் புரமோஷன் ஆபீசராக ஆரம்பித்து, சீனியர் அக்ரோநமீட்ஸ், ரீஜனல் மார்க்கெட்டிங் ஆபீசர் எனப் பல பதவிகளில் பதினெட்டு வருடங்கள் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்தேன்.

      ஆனால் இந்த பெளதிக மற்றும் உலகியல் படிப்புடன் சேர்த்து சிறுவயதிலிருந்தே  எனக்கு ஆன்மிகத்தின் மீதும் ஒரு ஈடுபாடு இருந்தது.

     சிறுவயதில் ரவிந்திரநாத் தாகூர் எழுதிய ‘சாந்தி நிகேதன்’ பற்றிக் கேட்கும்போதே என் உடல் புத்துணர்ச்சி பெற்றது. நான் என் எட்டுவயதில் முதன்முதலாகப் படித்த புத்தகம், ‘சத்திய சோதனை’.

     பத்து வயதில் விஸ்வநாத் சத்தியநாராயணா அவர்கள் எழுதிய ’வேய்படகலு’, பதினோரு வயதில் ‘பண்டித் சர்வபல்லி ராதாகிருஷ்ணன்’ அவர்கள் எழுதிய ‘இண்டியன் பிலாசபி’ எனும் இரண்டு புத்தகங்களை இரண்டுமுறை படித்தேன்!

     அதன்பின் பத்துவருடங்களில் நிறைய ஆங்கிலப் புத்தகங்களைப் படித்தேன். சாசர், க்ஷேக்ஸ்பியர், மில்டன் முதல் டிகென்ஸ் வரை டால்ஸ்டாய், டோஸ்டோவிஸ்கியிலிருந்து இரவிந்திரநாத் தாகூரின் ‘கீதாஞ்சலி’ வரை பல நூறு புத்தகங்களைப் படித்தேன். அத்துடன் தெலுங்கில் சலம் ஸ்ரீஸ்ரீ கொடவடிகண்டி, குடும்பராவு, அடிவி பாபிராஜு போன்றோர் எழுதிய புத்தகங்களைப் படித்திருக்கிறேன். சில இந்தி புத்தகங்களையும் படித்திருக்கிறேன்.

     படிப்புடன் சேர்த்து சங்கீதம், விளையாட்டு, பாட்டு, குடும்பம் போன்றவற்றுடன் சாதாரணமாக இருந்து கொண்டிருந்தாலும் எனக்குள் ஏதோ ஒரு ஏக்கம் என்னை அமைதியாக இருக்கவிடவில்லை. ‘ஏதோ செய்ய வேண்டும்’ என்று தோன்றும். அந்தச் ‘செய்ய வேண்டியது எது’ என்று தெரிவதில்லை! எல்லாம் இருந்தும் ஏதோ ஒரு வெறுமை, ஏதோ ஒரு தேடல்!

                பல்வேறு புத்தகங்களைப் படித்து, கொஞ்சமாக ‘ஞானயோகி’ ஆனேன். சங்கீதம் கற்று, ‘நாதயோகி’ ஆனேன். நல்ல வேலைகளைச் செய்து ‘கர்மயோகி’ ஆனேன். 1976 வரை ‘மந்திரங்கள்’, சில ‘ஆசனங்கள்’ கற்றுக்கொண்டேன். ஆனாலும் எனக்குள்ளிருக்கும் தேடல் மட்டும் குறையவில்லை; எல்லாமே ஏதோ ஒரு குறையாகத் தோன்றியது!

                1976ஆம் வருடத்திற்குப் பின் கர்னூலில் என் அலுவலக நண்பர் திரு.ராமசென்னாரெட்டி அவர்களின் மூலம், ‘ஆனாபானசதி’ தியானம் பற்றி அறிந்ததும் அனைத்தும் மாறிப்போனது. அதுவரை வாழ்க்கை எனும் நாற்காலியில் முன்னும் பின்னுமாகப் புரியாமல் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தேன். அதன்பின் அதே நாற்காலியில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கிறேன்!

                தியானம் செய்வதாற்குமுன் வீடு, மனைவி, கணவன், குழந்தைகள் என்று எல்லாம் நன்றாக இருந்தாலும், ‘ஏதோ சரியாக இல்லை’ எனத் தோன்றும்! நாம் தியானத்திற்கு வந்தவுடன், ஆன்மிக சாஸ்திரம் பற்றிய விழிப்புணர்வு பெற்றவுடன் ’எல்லாம் நன்றாக இருக்கிறது’ என்பது தோன்ற ஆரம்பிக்கும்.

     அதுவரை சரியில்லாத கணவன்கூட கொஞ்சம் நல்லவனாக இருப்பான். அதுவரை சரியில்லாத மனைவிகூட கொஞ்சம் நல்லவளாகத் தெரிவாள். அதுபோன்றே அதுவரை சரியில்லாத பிள்ளைகள் மற்றும் ’சரியில்லாத பக்கத்துவீட்டுக்காரர்கள்’ கூட கொஞ்சம் நன்ராகவே இருப்பார்கள். அதுவரை ’எனக்கு அது கிடைக்கவில்லை, இது கிடைக்கவில்லை என்று நாம் திட்டிய இறைவன்கூட கொஞ்சம் நன்றாகவே இருப்பார். ஆகையால் “எல்லாம் நன்றாகவே நடக்கும்” என்பதைத் தெரிந்து கொள்கிறோம்.

     ஒருவேளை தியானத்திற்கு வராமலிருந்தால் மட்டும், கடைசி மூச்சுவரை செய்ததையே செய்துகொண்டு, கேட்டதையே கேட்டுக்கொண்டு உண்டதையே உண்டு, பார்த்ததையே பார்த்து காலத்தை ஓட்டிக்கொண்டிருப்போம்! அதேபோன்று வாழ்விலும் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் போக ‘என்னுடையது துரதிருஷ்ட வாழ்க்கை’ என நினைத்துக் கொண்டிருப்பொம்!

     உலகியல் கல்வி அனைவருக்கும் முக்கியம் என்றாலும், ‘ஆன்மிகக்கல்வி’ அதைவிட முக்கியம் என்பதை என்றும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்! ஆன்மிகத்துடன் கூடிய வாழ்க்கையே முழுமையாகையால், நானும் ஞானவழியில் ஆன்மிகத்தை அறிந்து தீவிர தியான சாதனையை அனுபவத்தில் கொண்டு வந்த பிறகே முழுமையாக வாழ்கிறேன்.

     இப்போதுவரை சுமார் பத்தாயிரம் ஆன்மிக குருமார்கள் எழுதிய ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஆன்மிகப் புத்தகங்களைப் படித்துள்ளேன்! ஆனாலும் என் ஆன்மிக சைத்தன்யத்தைத் தட்டியெழுப்பிய மிகச் சிறந்தவர் லோப்சங் ராம்ப்பா!

     1979 இல்  இந்த திபெத் யோகி எழுதிய அறிவியல் சார்ந்த புத்தகம் ‘You Forever’ (என்றென்றும் நீயே) படித்தேன். ’மூன்றாம் கண்’ பற்றியும், ‘சூட்சும உடல் பயணம்’ பற்றியும், ‘ஆகாசிக் ரெகார்ட்’ பற்றியும், மரணத்திற்குப்பின் வாழ்க்கை பற்றியும் அவர் அவருடைய சுயஅனுபவத்துடன் எழுதியது என்னை ஒரு ஆன்மிக சாஸ்திரனாக மாற்றியது.

                அவர் மூலம் அபாரமான பரலோக ஞானத்தைப் பெற்ற நான், ‘இந்த உலகம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே இருக்கிறது’ எனும் சத்தியத்தைத் தெரிந்து கொண்டேன்.

     தியானம் மூலம் நமக்குள்ளிருக்கும் எண்ணங்களைச் சரிசெய்துகொண்டு பார்த்தால், நமக்கு உலகிலிருக்கும் ஒவ்வொன்றும் அற்புதமாகத் தெரியும் எனப் புரிந்துகொண்டேன். நமக்குள் எந்தளவு மாற்றங்கள் வருகிறதோ, அதே அளவு உலகிலும் மாற்றங்கள் ஏற்படும். நமக்குள் எவ்வளவு முன்னேற்றங்கள் ஏற்படுகிறதோ, அதே அளவு உலகிலும் முன்னேற்றங்கள் கண்கூடாகத் தெரியும் என்ற புரிதலும் ஏற்பட்டது.

முட்கள் நிறைந்த காட்டை நாம் கடக்க வேண்டுமெனில் அங்கிருக்கும்  முட்கள் அனைத்தையும் எடுக்க வேண்டிய அவசியமில்லை; கால்களுக்குச் செருப்பை அணிந்து நடந்தால்கூட போதும்.  நலமுடன் நம் இடத்தை அடைந்துவிடலாம். அதுபோலவே, ‘இந்த உலகில் நாம் சந்தோஷமாக வாழ வேண்டுமெனில் உலகை மாற்ற வேண்டிய அவசியமில்லை’ என்பதைப் புரிந்து கொண்டேன்.