Select Page

“ குரு பீடம் ”

என் வாழ்க்கையில் முதல் குரு பீடம் ஸ்தானத்தை வகித்தவர் என் தாயாகிய சாவித்ரி தேவி அவர்கள்.

ஒரு அற்புதமான தாயுருவம். அநேக கலைகளிலும் எனக்கு குரு. முக்கியமாக, சமையல் சாஸ்திரத்தில்.

அவரிடமிருந்து பொறுமை, ஏற்றுக்கொள்ளும் பக்குவம், சமூகத்தில் எல்லோரிடத்திலும் ஆதரவு, மரியாதை ஆகியவைகளைத் தெளிவாகக் கற்றுக்கொண்டேன்.

என்னுடைய வாழ்க்கையிலே இரண்டாவது குருபீடமாகத் திகழ்ந்தவர் என் மூத்த சகோதரர் டாக்டர். வேணு விநோத் பத்ரி அவர்கள்.

லெளகீக விஷயங்களில் அவர் முன்மாதிரியானவர். 32 வயதிலே இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பிஎச்.டி. பட்டம் பெற்றவர். இன்ஜினியரிங் அறிவியலில் ’மெகட்ரானிக்ஸ்’ என்றால் ’மெக்கானிகல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக் இன்ஜினியரிங்’ ஆகிய இந்த இரண்டு துறையையும் இணைந்து ’மெகட்ரானிக்ஸ்’ என்ற ஓர் புதிய துறையை உருவாக்கிய சிருஷ்டி கர்த்தா என் அருமைச் சகோதரர் வேணு.

இவர், ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் எமரிடஸ்சில் H.O.D பதவி வகித்தவர். ’எமரிடஸ்’ என்றால் ஓய்வு பெற்ற அதிகாரி என்றாலும் முடிவு எடுக்கும் அதிகாரம் இவருடையதே.

என்னைக் கர்நாடக, புல்லாங்குழல் உலகில் அடி எடுத்து வைக்கச் செய்த சங்கீதப் பிரியர், புல்லாங்குழல் வித்வான். இவர் மூலமாக ’சாஸ்திரிய கண்ணோட்டம்’, ’சாஸ்திரிய வாழ்க்கையைப்’ பெருமளவு கற்றுக் கொண்டேன்.

இவை நான் ஒரு பெரிய ஆன்மிக உலகத்திற்குச் சாரதியாக விளங்க உதவி செய்துள்ளது.

என்னுடைய வாழ்க்கையில் மூன்றாவது குருபீடமாகத் திகழ்ந்தவர், ஸ்ரீ T.S. சந்திரசேகரன் ஆவார். செகந்திராபாத் ரயில்வேயில் சிறு ஊழியராகப் பணி புரிந்துகொண்டு சுற்றி உள்ள ஊர்களிலே ஈடு, இணையில்லாத சங்கீத சேவை செய்தவர்.

இவரிடத்தில் பத்து ஆண்டுகள் கர்நாடக இசை, சங்கீத சேவை, புல்லாங்குழல் இசை ஆகியவற்றைக் கற்றுக் கொண்டேன்.
நம்முடைய தியான உலகில் புல்லாங்குழல் இசை எந்த அளவு பயன்பட்டுள்ளது என்பதை எல்லோரும் அறிந்ததே.

அதற்கு ஒரே ஒரு காரணகர்த்தா அமரர் திரு. T.S. சந்திரசேகரன் குரு அவர்களே.

அவருக்கு என்னுடைய ஆயிரம் வணக்கங்கள்.

என்னுடைய இந்த வாழ்க்கையில் நான்காவது குருபீடமாகத் திகழ்ந்தவர் மஹா குரு,பத்மபூஷண், டாக்டர் ஸ்ரீ பாத பிநாகபாணி அவர்கள் ஆவார்.

நூறாண்டுகள் வாழ்ந்து, சமீபத்தில் உடலை நீத்தார். ஆந்திர மாநிலத்தில் கர்நாடக சங்கீதம் வேரூன்றி விஸ்வரூபம் எடுத்து எல்லோரிடத்தும் சென்று அடைந்ததற்கு இவறுடைய அபாரமான முயற்சிதான் காரணம்.

அவரிடம் சேர்ந்ததனால்தான் என் குரலின் உண்மையான வளத்தை அடையப்பெற்றேன்.

அவருடைய பயிற்சியின் மூலம் என்னுடைய புல்லாங்குழல் இசைக் கலையில், பல புதிய பரிமாணங்கள் மலர்ந்தன.

அமரர் டாக்டர் ஸ்ரீ பாத பிநாகபாணி அவர்களுக்கு என்னுடைய நூறாயிரம் வணக்கங்கள்.

நிறைவாக ஐந்தாவது குருபீடமாகத் திகழ்ந்த கர்னூல் சுவாமி ஸ்ரீ சதானந்த யோகி அவர்களுக்கு என்னுடைய நூறு கோடி வணக்கங்கள்.