Select Page

“ ஞானாம்ருதம் ”

தியானத்தினால், ஆன்மஞானம் கிட்டும். தியானத்தின் லட்சியம் ஆத்மானுபவம். உடலுக்கு அனுபவம் அன்றாட வாழ்வில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், நமக்கு ஆன்ம அனுபவம் கிடைக்க வேண்டும். ஆன்ம அனுபவம் பெற, நாம் செய்ய வேண்டியது தியானம் ஒன்றே. பகவத் கீதையில் கிருஷ்ணரை, “நீ யார்?, நீ என்ன? உன்னை எனக்குப் புரியவில்லை” என்று அர்ஜுனன் கேட்டார். “அஹம் ஆத்மா குடாகேச” என்று ஸ்ரீ கிருஷ்ணர் பதில் கூறினார். “குடாகேச” என்றால் ‘உறக்கத்தை ஜெயித்தவன்’. அப்படிப்பட்டவன்தான் ஆன்மாவைத் தெரிந்திருப்பான்.

மிகவும் களைத்துப்போன உடலுக்கு உறக்கம் எவ்வளவு தேவையோ, அவ்வளவு தியானம், நலிவுற்ற ஆன்மாவிற்குத் தேவை. அர்ஜுனனின் உடல் நன்றாக உள்ளது, ஆனால் ஆன்மா களைத்துப் போய், துக்கமயமாக இருக்கின்றது. “என்னுடைய குருவை, தாத்தாவை, சகோதரர்களை, அவர்கள் அநியாயம் செய்து விட்டார்கள் என்பதற்காகக் கொலை செய்ய வேண்டுமா?” என்று நினைத்தவாறே அர்ஜுனனின் ஆன்மா களைப்படைந்திருக்கின்றது. அதே நேரத்தில் கிருஷ்ணரின் ஆன்மா களைப்பற்று, பலத்துடன், சக்தி வாய்ந்ததாக, குதூகலத்துடன் இருக்கின்றது.

“உடல் இங்குதான் இருக்கும். “நான்” என்பது மட்டுமே போய் விடும். இந்தச் சரீரம் வேறு, “நான்”
வேறு. உடலுக்கு மரணம் இருக்கின்றது. ‘நான்’ என்பதற்கு இறப்பு இல்லை. அந்த ‘நான்’ இங்கு நன்றாக விளையாடிவிட்டு மேலே போய்விடும். ஒருமுறை நீ ஜெயித்து விட்டால், இவையனைத்துமே உனக்குத்தான். அதனால் “யுத்தாய க்ருத நிஸ்ச்சய” (போரிடத் தயாராகுவாயாக) என்று அர்ஜுனனுக்கு உபதேசம் கொடுத்தார், ஸ்ரீ கிருஷ்ணர் எனும் களைப்படையாத, பலம்மிக்க ஆன்மா. அர்ஜுனன் ஒருசில நேரம் நன்றாக இருப்பார். சில நேரம் களைப்படைந்து விடுவார். சாதாரண நேரத்தில் நன்றாக இருப்பார். மிக முக்கியமான வேளையில் கலக்கமடைந்து விடுவார். ஏனென்றால் அவரிடம் தியான சக்தி இல்லை. தான் “ஆன்மா” என்று தெரிந்தாலும், நடைமுறையில் அந்த உண்மையை கிரஹிக்க அவரால் இயலவில்லை. அர்ஜுனனுக்கு தியானானுபவம் மற்றும் ஆன்மானுபவம் இல்லை. கிருஷ்ணருக்கு தியானானுபவம் அன்றாட வாழ்வில் இயல்பாக ஏற்படும், ஆன்மானுபவமும் ஏற்படும்.

தர்மத்தில் இவர்கள் இருவருக்கும் வித்தியாசம் கிடையாது. ஆனால் தியானத்தில் வித்தியாசம் உள்ளது. தர்மம் என்றால் செய்ய வேண்டிய காரியம். “இப்பொழுது உன்னுடைய காரியம் எல்லோரையும் வதம் பண்ணுவது. தர்மம் பாலிக்க, இரத்த சம்பந்தம் தடையாக இருக்கக்கூடாது” என்று கிருஷ்ணர் கூறினார்.

இப்பூமியில் எந்த நஷ்டம் ஏற்பட்டாலும், மானம் போயினும், சுபம் அல்லது அசுபம் ஏற்பட்டாலும் ஆன்மா சந்தோஷமாகவே இருக்கும், பெளதீக உடலில் ‘ஜன்மம்’ என்பது ஆன்மாவினுடைய விளையாட்டுதான். இந்த உலகம் சர்வாத்மாவினுடைய (எங்கும் வியாபித்திருக்கும் பரம்பொருள்) விளையாட்டுதான். விளையாட்டில் ஒருமுறை தோல்வியும், ஒருமுறை வெற்றியும் அடைவோம். தோல்வியும், வெற்றியுமின்றி விளையாட்டு நடக்குமா? பாடலில் ஒவ்வொருமுறை அபஸ்வரம் எல்லோருக்கும் ஏற்படுபவது சகஜம். ஆனால் அந்த அபஸ்வரத்திற்கு, தோல்விக்கு, ஆன்மா சிரிக்குமே தவிர அழாது; கண்ணீர் விடாது. வெற்றியடைந்தவர்களிடம், தோற்றவர்கள் நிறையக் கற்றுக் கொள்வார்கள்.

பாடலில் அபஸ்வரம் தற்செயலாக ஏற்பட்டுவிட்டால், இன்னும் சாதகம் நல்ல முறையில் செய்ய வேண்டும் என ஞானி நினைப்பாரே அல்லாமல், (நான் ஆன்மா என்று தெரிந்து கொண்டவர்) தற்கொலை செய்து கொள்ள மாட்டார். ஏனென்றால் ஆன்மாவிற்கு ‘இறத்தல் என்பது இல்லை’ என அவருக்குத் தெரியும்.

“சகல பிராணி” கோடிகளில், ஆன்மாவாக முதலிலும், இறுதியிலும், நடுவிலுமாக இருக்கிறேன். முதலும், முடிவுமாக இருக்கிறேன்” என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார். ஆத்மா “ஆதி, அனாதி”, ஆத்மா “அந்தம் அநந்தம், மத்தியமம்’. அது, நாம் எல்லோருமாகி இருக்கின்றது. சகல பிராணி கோடிகளில், ஒவ்வொரு மரமும், ஒவ்வொரு புற்றும், ஒவ்வொரு கொசுவும், ஒவ்வொரு யானையும், ஒவ்வொரு மனிதனும் ‘ஆன்மாவாக’ இருக்கின்றோம். இந்த சத்தியம் ஒவ்வொரு புற்றிற்கும், ஒவ்வொரு விலங்கிற்கும் தெரியும். ஒவ்வொரு மரத்திற்கும் தெரியும். ஆனால் மனிதனுக்கு மட்டும் தெரிவதில்லை. அதனால் எங்கேயும் எந்த மரமும் அழுவதில்லை. அங்கே ஆன்மா, களைப்படவதோ, பலவீனம் அடைவதோ கிடையாது. அந்த மரம், தான் ‘ஆன்மா’ என்பதைத் தெரிந்து கொண்டிருக்கிறது.

எந்த ஒரு விலங்கும் அழுவதில்லை ஏனென்றால் அவை சரீரத்துடன் வாழ்க்கை வாழும். வெற்றியடைந்தாலும், தோல்வியடைந்தாலும், விலங்கு ஆன்மாகூட களைப்படையாத பலவீனமடையாத ஆன்மாவாகவே இருக்கும். “விலங்கு ஆன்மா, மாற்றமற்ற ஆன்மா.”

தியானம் செய்யாத அர்ஜுனன் மொட்டுப் போன்றவர். தியானம் செய்த கிருஷ்ணர் ஒரு மலர்ந்த புஷ்பம். இந்தப் புஷ்பம், பழமாகி, பிரசாதம் கிடைக்கும். நாம் பெற்ற பகவத்கீதை ஸ்லோகங்கள் கிருஷ்ணப்பிரசாதம் அல்லவா? அவர் பழமாகியதால்தான் அதனை நாம் உணர்கின்றோம்.

அதேசமயம் பச்சைக் காயை நாம் உண்போமா? ஒரு மொட்டு மூடிக்கொண்டிருக்கும். ஒரு மலர் விரிந்திருக்கும். தியானம் செய்யாத ஆன்மா ஒரு மொட்டுப் போன்று மூடியிருக்கும். எவ்வளவு தியானம் செய்கிறோமோ அவ்வளவு மலர்ச்சி ஏற்படும். இந்த மலர்தலுக்கு அழிவில்லை; முடிவில்லை. அந்த “ஸகஸ்ர தளகமல இதழ்கள்” எப்பொழுதுமே விரிந்து கொண்டே இருக்கும். இங்கு “ஸகஸ்ர தள கமலம்” என்றால் ‘ஆயிரம் இதழ்கள்’ என்பதல்ல. “அனந்த கோடி இதழ்கள்” என்று அர்த்தம். எவ்வளவுக்கு எவ்வளவு தியானம் செய்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு இதழ்கள் மலர்ந்து கொண்டேயிருக்கும். அவ்வளவிற்கவ்வளவு நாம் விஸ்தாரமாக, விசாலமாக, பிரகாசமாக உயர்ந்து கொண்டேயிருப்போம்.

“இந்தப் பிறவியில் எனக்கு எந்த ஒரு நோயும் இல்லை. துக்கமும் கிடையாது. இவை போவதற்காக நான் தியானம் செய்யவில்லை. மோட்சத்திற்காகக் கூட நான் தியானம் செய்யவில்லை. பிறக்கின்ற பொழுதே மோட்சத்துடன்தான் பிறந்தேன். தியானத்திற்கு முன்பே எனக்கு அனைத்து வித்தைகளும் வந்துவிட்டன. ஆனால், தியானத்தினால் உலகம் முழுவதும் நண்பர்கள் கிடைத்தனர். இதுதான் என்னுடைய சொந்த அனுபவம். அதுதான் உண்மையான லாபம். பிரமிட் தியானத்தினால் மாமிசம் சப்பிடுபவர்கள் அனைவரும் சைவ உணவினராக மாறிக் கொண்டிருக்கின்றனர்”.

“அது எனக்கு எல்லாவற்றையும் விட மிக முக்கியமான லாபம். நான் பிறந்தது மனிதர்களுக்காக அல்ல; விலங்குகளுக்காக. கடைசி விலங்கு, சந்தோஷமாக இங்கு வாழும்வரை நான் இவ்வுடலை விட்டு விலகமாட்டேன்”.

“நான் 2095ம் ஆண்டு வரை உடலைப் பிரியமாட்டேன். அதற்குள் இவ்வுலகத்திலுள்ள அனைத்து விலங்குகளும், சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் வாழும். அவர்கள் மீது எவ்வித பலாத்காரமும் செய்யாமல், மனிதர்களை அஹிம்சாவாதிகளாகத் தயார் செய்வதற்காகத்தான் நான் இங்கு பிறவி எடுத்திருக்கிறேன்.

“நான் நினைத்ததைச் சாதிப்பேன். இப்பூமண்டலத்தைச் சைவ உணவு மயமாகச் செய்வதற்கு நான் மட்டுமே போதும். எந்த நாளில் இப்பூமண்டலம் முழுவதுமே சைவ உணவுமயமாக மாறுமோ அந்த நாள் நான் வேறு பரிமாணத்திற்குப் போக வேண்டும். அதுதான் என்னுடைய செயல் திட்டம். அதுவேதான் நம் எல்லோருடைய செயல் திட்டமும் கூட.

யோகி வேமனா என்பவர் தன் பாடலில், “விலங்கு மற்றும் பறவை இனங்களைப் பிடித்து, நரக வேதனைகளைக் கொடுத்து, சமையல் செய்து, வயிறு புடைக்க உண்பவர்கள் இப்பூமியின் மீதுள்ள சண்டாளர்கள்.” என்று கூறியுள்ளார்.

“என்னுடைய ஜன்ம சாதனை இப்பாடல்தான்” என்று பத்ரிஜி கூறியுள்ளார். “இங்கு விலங்குகளுக்கு ஹிம்சை உண்டாகிறது. இதுபோதாதென்றால், ஆண்கள், பெண்களிடம் அதிகமான வன்முறையைப் பிரயோகிக்கின்றனர். மேலும் குழ்ந்தைகளைப் பெற்றோர்கள் பலவந்தமாகப் படிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்திக் கொடுமைப்படுத்துகின்றனர். பிறப்பு, இறப்பு இல்லாத ஆன்மிகக் கல்வியைக் கற்க வேண்டுமானால் ஆன்மஞானத்தைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று உறுதியாகக் கூறுகிறார், பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா. அவர் எந்தப் படிப்பையும் படிக்கவில்லை. ஆனாலும், நம் எல்லோருக்கும் போதனைகள் செய்தார். அவர் படித்தது ஆன்மப்படிப்பு. உலகம் முழுவதையுமே ஆட்சி செய்தார். அவர் என்ன படித்தார்? அவர் படித்தது ஞானப் படிப்பு. விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், இரமண மகரிஷி… எல்லோரும் ஆன்மப் படிப்பைத்தான் படித்தார்கள். இந்த ஆன்மப் படிப்பை கற்றுக் கொடுக்கத்தான் நாம் ஊர் ஊராகச் செல்கிறோம்”.