Select Page

“ கன்பூசியஸ்… மாபெரும் சீன மெய்ஞானி ”

“ நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை ”

மாபெரும் அறிஞர்கள் எல்லா நாட்டிலும் பிறக்கிறார்கள். நாம் தலைவராக விரும்பினால், நாம் இவர்களைப் போன்ற தொன்மையான தலைவர்களிடமிருந்து ஊக்கம் பெற வேணும்.

நாம் சத்தியத்தை ஆராய விரும்பினால் இப்படிப்பட்ட உலகின் அனைத்து பேரறிஞர்களின் போதனைகளையும் கூர்மையாகக் கவனிக்க வேண்டும். நாம் சாக்ரடீஸிடம் கற்க வேண்டும். ஏசுபிரானிடம் கற்க வேண்டும். புத்தரிடம் கற்க வேண்டும். ஷோராஸ்டரிடம் கற்க வேண்டும். கன்பூசியஸிடம் கற்க வேண்டும்.

 

“ கன்பூசியஸ் – விஞ்ஞானி, மெய்ஞானி ”

சீனா ஒரு மாபெரும் அறிவுக்களஞ்சியம். அங்கு பல அறிஞர்கள் தோன்றி உள்ளனர். எடுத்துக்காட்டாக லாவோ ட்சு, சுவாங் ட்சு, மெங் ட்சு மற்றும் பலர். சீனா பல ஞானிகளைப் பெற்றுள்ளது. அவர்களில் முன்னோடி ‘ஞானி கன்பூசியஸ்’

கன்பூசியஸ் 5 – 6 (கி.மு.) நூற்றாண்டில் வாழ்ந்தார். புத்தர் இந்தியாவிலும் மற்றும் சாக்ரடீஸ் கிரேக்கத்திலும் வாழ்ந்த சமயம் இவர் சீனாவில் வாழ்ந்து வந்தார்.

இந்தியாவில் பகவத் கீதை எப்படியோ, அது போன்றுதான் சீனாவில் கன்பூசியஸின் ‘மாபெரும் கற்றல்’ (THE GREAT TEACHINGS).

 

சாந்தமாக நிலைத்தல்

கன்பூசியஸ் கூறுவதை கவனிப்போம்.

“மனம் தணிந்த பின்னரே அமைதி அடையும். அமைதி அடைந்த பின்னரே சாந்தி அடையும். சாந்தி அடைந்த பின்னரே நிதானம் அங்கே தொடங்கும்”.

 

மனதின் அமைதி

எவ்வாறு நாம் உண்மையாக தணிவது?

எவ்வாறு நாம் பேரமைதி அடைவது?

எவ்வாறு நாம் நிலையான சாந்தி பெறுவது?

எவ்வாறு நாம் நிதானத்தை உணர்வது?

கன்பூசியஸ் ஒரு குறிப்பிட்ட தியான முறையைப் பற்றி கூறவில்லை என்றாலும் மனதின் தணிதல் மற்றும் அமைதியைப் பற்றி குறிப்பாக உணர்த்தி உள்ளார்.

கன்பூசியஸ் ‘தியானம்’ பற்றிக் கூறவில்லை என்றாலும், அவர் தியானத்தில் கைதேர்ந்தவராக இருந்திருக்க வேண்டும். மேற்கூறிய வார்த்தைகளை மொழிந்திருக்கிறார் என்றால், அவர் மனதில் பேரமைதியை உணர்ந்திருக்க வேண்டும். அவர் மனம் தணிந்திருக்காமல் எப்படி பிறருக்கு அதைப்பற்றி உரைக்க முடியும்?

 

சீனத்தின் மாபெரும் கற்றல்

கன்பூசியஸின் கீழ்வரும் சொற்களே ‘மாபெரும் கற்றல்’ என்று சீனத்தில் அழைக்கப்படுகிறது.

எவர் ஒருவர் உலகில் தெளிவு நிலையினை விரும்புவாரோ,

அவர் முதலில் மாநிலத்தை ஒழுங்குபடுத்துவார்.

எவர் ஒருவர் மாநிலத்தை ஒழுங்குபடுத்த விரும்புவாரோ,

அவர் குடும்பத்தை முதலில் சீரமைப்பார்.

எவர் ஒருவர் குடும்பத்தை சீரமைக்க விரும்புவாரோ,

அவர் தன்னை முதலில் நெறிப்படுத்துவார்.

எவர் ஒருவர் தன்னை நெறிப்படுத்த விரும்புவாரோ,

அவர் தன் மனதை முதலில் தூய்மைபடுத்துவார்.

எவர் ஒருவர் தன் மனதை தூய்மைபடுத்த விரும்புவாரோ,

அவர் தன் விருப்பங்களை முதலில் நேர்மைபடுத்துவார்.

எவர் ஒருவர் தன் விருப்பங்களை நேர்மைபடுத்த விரும்புவாரோ,

அவர் தன் அறிவினை முதலில் பெருக்குவார்.

அறிவினை பெருக்குவது, பொருட்களை ஆராய்வதை உள்ளடக்கியுள்ளது.

பொருட்களை ஆராயும் பொழுது அறிவு பெருகும்.

அறிவு பெருகும் பொழுது விருப்பங்கள் நேர்மையாகும்.

விருப்பங்கள் நேர்மையாகும் பொழுது, மனது தூய்மை அடையும்.

மனது தூய்மை அடையும் பொழுது, சுய வாழ்க்கை நெறிபடும்.

சுய வாழ்க்கை நெறிபடும் பொழுது, குடும்பம் சீரமையும்.

குடும்பம் சீரமையும் பொழுது, மாநிலம் ஒழுங்குபடும்.

மாநிலம் ஒழுங்குபடும் பொழுது, உலகத்தில் அமைதி நிலவும்.

 

குடும்பங்கள் சீரமைத்தல்

நாம் உலகிற்கு நம் நாட்டின் பெருமையை உணர்த்த வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? நாம் முதலில் மாநிலங்களை ஒழுங்குபடுத்த வேண்டும்.

நாம் மாநிலங்களை சீரமைக்க விரும்பினால் பழங்குடியினரையும், கூட்டு குடும்பங்களையும் பாதுகாக்க வேண்டும். முற்காலத்தில் பெரும் கூட்டு குடும்பங்களே இருந்தன. ஆனால் இப்பொழுது குடும்பங்களே உள்ளன. கூட்டு குடும்பங்கள் இல்லை. அதனால், குடும்பங்களை முதலில் சீரமைக்க வேண்டும்.

அதுவும் நாமே எடுத்துக்காட்டாக திகழவில்லை எனில், குடும்பத்தை சீரமைக்க இயலாது. ஆகவே குடும்ப சீரமைப்பில் சுயவாழ்க்கையை தூய்மைபடுத்த வேண்டும். நாம் முழுதாக சரியாக இல்லாமல், குடும்ப உறுப்பினருக்கு அறிவுரை கூற முடியாது.

நாம் பூரணமாக இல்லாமல் நம் குடும்பத்திலோ அல்லது சுற்றுபுறத்திலோ சரியான விளைவுகளை ஏற்படுத்த முடியாது. பூரணம் என்றால் நம் எண்ணம், சொல் மற்றும் செயலில் ஒன்றியிருப்பது.

ஆகவே சுய வாழ்க்கையை செம்மைபடுத்துவரே உண்மையான, ஆரோக்கியமான சமூக வளர்ச்சிக்கு அடிகோல். ஆகவே சமூக பொறுப்புணர்ச்சி உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் தன் சுய வாழ்க்கையை எவ்வளவு நிறைவாக செம்மைபடுத்த முடியுமோ அப்படி செய்வதே தர்மம் ஆகும். இதற்கு அதிகப்படியான நேர்மையும், யதார்த்தமான ஒழுங்குபடுத்திய மனமும் தேவை.

 

நேர்மை மற்றும் மனப்பூர்வத் தன்மை

நேர்மை என்பது வாழ்நாள் முழுதும் தொடரும் பொறுப்பு. ஒவ்வொரு நாளும் ஒரு பகுதி சுய வாழ்க்கையை நேர்மையாக சீரமைப்பதற்காக செலவிட வேண்டும். இதையே மனப்பூர்வத்தன்மை என்கிறோம்.

எவ்வாறு தினசரி உணவிற்காக பணம் சம்பாதிக்க நேரம் ஒதுக்குகிறோமோ, அவ்வாறே நம் சுய வாழ்க்கையை செம்மைபடுத்தவும் நேரம் ஒதுக்க வேண்டும். நம் சுயவாழ்க்கையை செம்மைப்படுத்த மனம் தூய்மை அடைய வேண்டும். பொய்யான மனம் – எதிர்மறையான மனம், நேர்மறையற்ற மனம், பொருளாசை மற்றும் உலகில் நிலைத்த மனம். இப்பேர்ப்பட்ட மனம் தூய்மையடைதல் வேண்டும்.

பிறரை குறை கூறும் மனதிலே நாம் இணைந்துள்ளோம். நமக்கு தப்பு நேர்வதற்கும், பிறர் மீதே பழி போடுகிறோம். இல்லையேல் கற்பனையான புலப்படாத சக்தி மீது எல்லாவற்றுக்கும் பழி கூறுகிறோம். நம்மீது எப்பொழுதும் பழி கூறுவதில்லை. நாம் நம் பொறுப்பைக் கூட ஏற்பதில்லை. இதுவே மிகவும் பைத்திய நிலையில் உள்ள மனம் ஆகும்.

 

மனம் தூய்மை படுத்துதல்

நாம் நிலத்தை பண்படுத்த விரும்பினால், பயிர் வளர்க்க விரும்பினால், முதலில் அதைக் கல், மற்றும் குப்பைகள் இல்லாமல் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு நன்றாக உழுது தயார் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் விதை விதைப்பதற்கு பக்குவப்படும்.

அதேபோல் ஒரு ஞானியாக விரும்பினால், உண்மையில் நம் சுய வாழ்க்கையை செம்மைப்படுத்த விரும்பினால், நம் எதிர்மாறான தவறான எல்லா எதிர்மறையையும் மனதிலிருந்து விலக்கிட வேண்டும். எவ்வாறு ஒரு உழவன் தன் நிலத்தை பண்படுத்துகிறானோ, அதுபோல ஒரு ஞானி தன் சுய வாழ்க்கையை செம்மை செய்கிறான்.

எல்லா முன்னால் ஞானிகளும், “தியான அறிவியல்” எனும் மனதைத் தூய்மைபடுத்தும் விஞ்ஞானம் அறிந்திருந்தனர். அதன் மூலம் அவர்கள் சுய வாழ்வை செம்மைப்படுத்தினர். சத்தியத்தில் உறைய தூய்மையான மனமே அடிக்கோல்.

மனம் விஞ்ஞான பூர்வமாக இருந்தால் தான் உண்மையை பார்க்கவோ, கேட்கவோ முடியும்.

 

விருப்பங்களை நேர்மையாக்குதல்

நம் விருப்பங்கள் நேர்மையாக இருக்கும் பொழுது மனம் தூய்மை அடைகிறது.

“உன் மனதை தூய்மைபடுத்த, உன் விருப்பங்களை நேர்மையாக்கு”. நம் விருப்பங்களை நேர்மையாக்குவது மிகமிக கடினமான ஒன்று. நாம் “பண்டித் ரவி சங்கர்” போன்று பெரும் இசைக்கலைஞர் ஆக விரும்பினால், நம் முழு வாழ்க்கையையும் இசைப் பாதையிலே இயக்க வேண்டும். நாம் இசையைத் தவிர பிற செயல்களில் ஈடுபட முடியாது. பலமணி நேரங்கள் பயிற்சியில் மட்டும் கழிக்க வேண்டும்.

அதுபோல, ஒரு பெரும் ஞானி, பலமணி நேரங்கள் தியானம் செய்ய வேண்டும். இப்படிப் பழக, பழக, உருவாவது “நேர்மையான விருப்பம்” ஆகும். “எவர் ஒருவர் தன் மனதை தூய்மைப்படுத்த விரும்புகிறாரோ, முதலில் அவர் தன் விருப்பத்தை நேர்மையாக அமைக்க வேண்டும்”.

கன்பூசியஸ் மாபெரும் மேதை. அவர், நாம் மேதை ஆவதற்கான அனைத்து நுட்பங்களையும் கொடுத்துள்ளார். நாம் மிகமிகத் தெளிவாக இருக்க வேண்டும், மனதளவில். இந்த வாழ்க்கையில் என்ன சாதிக்க விரும்புகிறோம் என்பதை தெளிவுபடுத்துவதே, விருப்பங்களைத் தூய்மையாக்குவது ஆகும்.

 

மனப்பூர்வம் மற்றும் ஞானம் பெறுதல்

சீன ஞானிகளின் அறிவுரையினை ஒரு வரியில் சுருக்கினால், “நேர்மையே மனப்பூர்வமான தன்மையை உருவாககும், மற்றும் மனப்பூர்வமான தன்மையே ஞானம் பெறுதலை உருவாக்கும்”.

இது இசை, அறிவியல், ஞானமார்க்கம் எதுவாக இருந்தாலும் சரி. நாம் முழுமையாக நேர்மையாக செயல்பட வேண்டும்.

 

அறிவை பெருக்குதல்

எப்படி நாம் விருப்பங்களை நேர்மைபடுத்த முடியும்? எந்த வழியாக? கன்பூசியஸ் விடை அளிக்கிறார் : “தன் விருப்பங்களை நேர்மை படுத்த விரும்புவோர் முதலில் அறிவை பெருக்குவர்”.

அறிவுதான் நேர்மைக்கும் – நேர்மையின்மைக்கும், ஞானத்திற்கும் – அஞ்ஞானத்திற்கும் இடையே உள்ள முக்கிய விஷயம். எவ்வாறு உலகம் பணத்தை சுற்றித் தேடுகின்றதோ அதுபோல ஞானி அறிவை சுற்றித் தேடுகிறார்.

உலக மக்கள் அதிக பணத்தை வைத்து எவ்வாறு மிக நன்றாக இருக்க முடியும் என்று எண்ணுகிறார்களோ, அதுபோல அதிக அறிவை ஞானிகள் விரும்புவர். எனவே விருப்பம் நேர்மையாக அமைய, முதலில் அறிவைப் பெருக்க வேண்டும்.

அறிவு, அறிஞர்களைப் பார்த்து, பழகும் பொழுது விரிவடைகிறது. இதுவே ‘சஜ்ஜன சங்கத்யா’ என்பர்.

அறிவை பெருக்க மற்றொரு முறை பேரறிஞர்கள் மற்றும் பெரும் ஆச்சாரியாளர்களின் நூல்களைப் படிப்பதாகும். இதனை ‘சுவாத்யாயா’ என்பர்.

‘சுவாத்யாயா’ மற்றும் ‘சஜ்ஜன சங்கத்யா’ இவை இரண்டும் அறிவை பெருக்குவதற்கு முக்கிய காரணிகள் ஆகும்.

 

பொருட்களை ஆராய்தல்

பொருட்களை ஆராய்வதில் அறிவு பெருகும். அறிவு பெருகும் பொழுது விருப்பம் நேர்மையாகும். அறிவை பெருக்குவதே நம் குறிக்கோள். அறிவே அனைத்தும், அறிவே நமக்கு உறுதுணை.

நாம் எவ்வளவு அறிவை பெறுகிறோமோ அந்தளவுக்கு நம் விருப்பம் நேர்மையாகும். அறிவு எப்படி வளரும்? கன்பூசியஸின் பதில், “பொருட்களை ஆராய வேண்டும். ஒரு விஞ்ஞானி பொருட்களின் தன்மையை ஆராய்கிறார். ஒரு ஞானியோ மனிதத் தன்மையை ஆராய்கிறார். ஞானி வரைமுறை மற்றும் ஒழுக்கத்தை ஆராய்கிறார். ஞானி ஆன்மாவையும் ஆராய்கிறார்”.

 

பொருள் மற்றும் ஆன்மா

இரு பொருட்கள் உள்ளன. அவை இரு கருத்துக்கள் ஆகும். பொருள் மற்றும் ஆன்மா, உடல் மற்றும் ஆன்மா. உலகின் ராஜ்ஜியம் மற்றும் கடவுளின் ராஜ்ஜியம். “ஐன்ஸ்டின்” எனும் விஞ்ஞானி அணு மற்றும் கூறுகள், எலக்ட்ரான் மற்றும் பாசிடரான் பொருட்களைப் பற்றி ஆராய்ந்தார். ஐன்ஸ்டின் விஞ்ஞானி ஆனார். புத்தரோ மெய்ஞானி ஆனார்.

“ஏதென்ஸ்” நாட்டின் சாக்ரடீஸ் ஆனமாவின் கூறுகளை ஆராய்ந்தார். அதே சமயத்தில் உலகின் இன்னொரு பகுதியான சீனாவில் கன்பூசியஸ் என்பவரும் ஆனமாவை ஆராய்ந்தார்.

 

உயர்ந்த மனிதர்கள் நேர்மையானவர்கள்

கன்பூசியஸ் என்ற மெய்ஞானி ‘உயர்ந்த மனிதன்’ பற்றி கூறி உள்ளார்.

‘உயர்ந்த மனிதன்’ தன் சுய வாழ்க்கையை கவனமாகப் பண்படுத்துவான்.

‘உயர்ந்த மனிதன்’ தன் மனதை தூய்மைப்படுத்த பல இன்னல்களைத் தாங்குவான்.

‘உயர்ந்த மனிதன்’ எப்பொழுதும் பொருட்களை ஆராய்வான்.

ஒருவர் பொருட்களை ஆராய்ந்தால் விஞ்ஞானி ஆவார். ஒருவர் ஆன்மாவை ஆராய்ந்தால் மெய்ஞானி ஆவார்.

உலகம் முழுவதும் அமைதி நிலவும்

கன்பூசியஸின் மாபெரும் வார்த்தைகளை நினைவு கூறுவோம்.

“பொருட்களை ஆராயும் பொழுது அறிவு பெருகும்.

அறிவு பெருகும் பொழுது விருப்பங்கள் நேர்மையாகும்.

விருப்பங்கள் நேர்மையாகும் பொழுது, மனது தூய்மை அடையும்.

மனது தூய்மை அடையும் பொழுது, சுய வாழ்க்கை நெறிப்படும்.

சுய வாழ்க்கை நெறிப்படும் பொழுது, குடும்பம் சீரமையும்.

குடும்பம் சீரமையும் பொழுது, மாநிலம் ஒழுங்குபடும்.

மாநிலம் ஒழுங்குபடும் பொழுது, உலகில் அமைதி நிலவும்”.

 

உலகம் முழுவதும் அமைதியை உருவாக்குவதே குறிக்கோள். எல்லோரும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும், இருக்க வேண்டும். அனைவரும் அன்பாகவும், ‘பிறருக்கு அளிக்கும்’ குணம் உடையவராகவும் இருக்க வேண்டும். அனைவரும் நேர்மையாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும்.

 

விஞ்ஞானி மற்றும் மெய்ஞானி

விஞ்ஞானிகள் பொருள் சார்ந்த வாழ்க்கையை மிக வசதியாக்கி உள்ளனர். மெய்ஞானிகள் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், பொருளுடையதாகவும் உருவாக்கி உள்ளனர். “நான் யார்?”, நான் வந்ததன் நோக்கம் என்ன?”, “எது உண்மை?”, “மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?”, “நோய் மற்றும் துயரத்தின் காரணம் என்ன?’ போன்ற கேள்விகளே உயர்ந்த மனிதனுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஆராய, ஆராய விடைகளை உணர இயலும்.

 

தியானம் பழகுதல்

தம் தன்மையையோ அல்லது ஆன்மாவின் தன்மையையோ ஆராய்வதற்கு, அறிவு சார்ந்த கேள்விகள் சரியான வழியல்ல. நம் வாழ்க்கையின் வழிகளை உண்மையாக ஆராய, தியானமே தேர்ந்த முறையாகும். அதுவே மனதை நிலைப்படுத்தி அமைதியாக்கி சாந்த நிலையை உருவாக்குகின்றது.

மறுபடியும் கன்பூசியஸின் வார்த்தைகள் : “மனம் தணிந்த பின்னரே அமைதி அடையும். அமைதி அடைந்த பின்னரே சாந்தி அடையும். சாந்தி அடைந்த பின்னரே நிதானம் அங்கே தொடங்கும்.” எவ்வளவு பொன்னான மொழிகள்.

மனம் தணிவதற்கு தியானம் வழிவகுக்கும். அமைதி அடைவதற்கும் தியானம் வழிவகுக்கும். அதுவே நிரந்தரமாக சாந்தி அடையும் வழி.