Select Page

“ பாபா தத்துவம் – பாபா முத்திரை ”

மனிதனது கை, ஐந்து விரல்களைக் கொண்டது. இவை சிறுவிரல், மோதிர விரல், நடுவிரல், ஆள்காட்டி விரல், பெருவிரல். இந்த விரல்கள் ஆன்மிக நியதியாக வெவ்வேறு தத்துவங்களைக் குறிக்கின்றன.

 

சிறு விரல் – பெளதிக உடல்

மோதிர விரல் – மனம்,

நடுவிரல் – புத்தி,

ஆள்காட்டி விரல் – ஆன்மா,

பெருவிரல் – பரம்பொருள் (பரமாத்மா)

பெளதிக உடல்

சிறுவிரல் பெளதிக உடலைக் குறிக்கிறது. பெளதிக உடல் பெற்றோரிடமிருந்தும், பஞ்ச பூதங்களிலிருந்தும் பெறப்படுகிறது. ஆன்மாவின் ஒரு மிகச்சிறிய பாகம்தான் பெளதிக உடல். அதனால் தான் அதனை, சிறு விரல் (சிறியது) குறிக்கின்றது.

 

மனம்

மோதிர விரல் மனதைக் குறிக்கிறது.

எப்போது இரு இதயங்கள், இரு மனங்கள் ஒன்று சேருகின்றனவோ அப்போது திருமணம் முடிவாகி மோதிரங்கள் மோதிர விரலில் மாற்றிக் கொள்ளப்படுகின்றன. வேறு எந்த விரலிலும் அல்ல.

மனம் என்பது சமுதாயத்தில்லிருந்து பெறப்படுகிறது. நாம் இந்து மதத்தில் (குடும்பத்தில்) வளர்ந்தால் இந்து மதத்தைச் சார்ந்து வாழ நமது மனம் உருவாகிறது. கிறித்துவ குடும்பத்தில் வளர்ந்தால் கிறித்துவ மதத்தைச் சார்ந்தவாறு நமது மனம் உருவாகிறது. அதே போன்று மற்ற மதங்களில் வளர்ந்தால் அந்தந்த மதங்களைச் சார்ந்தவாறு மனம் உருவாகிறது.

மேலும் மோதிர விரல் சிறுவிரலை விடப் பெரியது. இது மனம், உடலை விட மிக முக்கியமானது என்பதைக் குறிக்கின்கிறது. மனம்தான் உடலைக் கட்டுப்படுத்தவல்லது.

 

புத்தி-அறிவு

நடுவிரல் புத்தியைக் குறிக்கின்றது.

 

புத்தியானது நமக்கு நல்லது, கெட்டது – உண்மை, பொய் – சரி, தவறு – அழகு, அழகின்மை இவற்றை சமுதாயத்தின் பாதிப்பு இல்லாமல் வேறுபடுத்திக் காட்டுகிறது. மனம் பெரும்பாலும் ஒருதலைப்பட்சமானது. ஆனால் புத்தி நடுநிலையானது.

புத்தி பல முன்ஜன்ம அனுபவங்கள் மற்றும் கர்ம வினைப் பதிவுகளின் கூட்டுச் சேர்க்கை ஆகும். நமது அனைத்து ஜன்மங்களின் அனுபவங்களின் மொத்தத் தொகுப்பே நமது தற்போதைய பிறவியில் கிடைத்திருக்கும் புத்தியின் ஆதாரம் ஆகும். ஒரு ஆன்மாவின் மொத்த (பூமியில்) பிறப்பு அனுபவங்களின் பலனே புத்தி ஆகும்.

 

ஆன்மா

ஆள்காட்டி விரல் ஆன்மாவைக் குறிக்கின்றது. ஒருவரைச் சுட்டிக் காட்டும்பொழுது நாம் வேறு எந்த விரலையும் பயன்படுத்தாமல், எப்பொழுதும் ஆள்காட்டி விரலையே பயன்படுத்துகிறோம். ஏனென்றால் ‘நாம் என்பது, நமது உடல், மனம் மற்றும் புத்தி மட்டுமல்ல’, ‘நாம்’ என்றால் ஆன்மாவும் சேர்ந்ததுதான்.

 

ஜீவாத்மா

நாம் அனைவரும் ஆன்மா ஆவோம். சக்தி-சைதன்யம் (உணர்வு நிலை) – ஞானம் இவற்றின் ஒரு பொறிதான் ஆன்மா. ஒரு தனிப்பட்ட ஆன்மாவை, ‘ஜீவாத்மா’ என்கிறோம்.

 

பரமாத்மா

பெருவிரல் பரமாத்மாவைக் குறிக்கின்றது. ஆன்மாவின் பிறப்பிடம் ‘பரமாத்மா’ ஆகும். நாம் அனைவரும், மற்றவரிடமிருந்து உடல், மனம் மற்றும் புத்தி அளவில் வேறுபடுகிறோம். ஆனால், நம் அனைவரது ஆன்மாவின் பிறப்பிடம் ஒன்றே ஆகும். ஆன்மநிலையில் நாம் அனைவரும் ஒன்றே ஆவோம்.

அனைத்து ஆன்மாக்களின் பிறப்பிடமான எல்லையற்ற சக்தியே, ‘பரம்பொருள்’ எனப்படுகிறது. இதையே நாம் ‘பிரம்மாத்மா’ அல்லது ‘சர்வ பூதாத்மா’ என்று அழைக்கிறோம். உலகின் மிகப்பெரிய உண்மை என்னவென்றால் ‘நம் ஆன்மாவே பரம்பொருள்’, ‘நாமே கடவுள்’ என்பதாகும். பரம்பொருளைக் குறிப்பது நமது பெருவிரல். வெற்றி என்பது நமது பெருவிரலால் சுட்டிக் காட்டப்படுகிறது.

 

பாபா முத்திரை:

பாபா முத்திரையில் மோதிரவிரலும் நடுவிரலும் மடிக்கப்பட்டு, பெருவிரலால் பிடிக்கப்பட்டிருக்கின்றன. சிறுவிரலும், ஆள்காட்டி விரலும் தொடப்படாமல் இருக்கின்றன. இதன் முக்கியத்துவம் என்னவென்றால் உடலை வருத்தாமலேயே ஆன்மிக முன்னேற்றம் அடையலாம் என்பதாகும்.

 

உடல் மிகவும் அழகானது, அற்புதமானது, இயற்கையின் உயர்ந்த படைப்பு ஆகும்.

சிரம்மான ‘ஹட யோக’ பயிற்ச்சி தேவையில்லை.

சிரசாசனம் போன்ற கடின முயற்சி தேவையில்லை.

 

உடலை ஆனந்தமாக அனுபவித்தால் போதும். இரண்டாவது விரலான மோதிரவிரல், அதாவது
மனம், அதை எவ்வாறு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்? அலைபாயும் மனதை முழுவதுமாக நல்வழிப்படுத்த வேண்டும். அதை சுத்தப்படுத்தி கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

சமுதாயத்திலுள்ள அனைத்து தேவையற்ற செயல்களும், ஏற்கனவே உண்டான தேவையற்ற பதிவுகளும், மனித மனதில் பிரதிபலிக்கின்றன. முன் பதிவுகளும், தேவையற்ற செயல்களும் நாம் ஞானம் அடையத் தடையாக இருக்கின்றன. இந்த முன் மதிப்பீடுகளையும் தேவையற்ற செயல்களையும் கொஞ்சம் கொஞ்சமாகக் களையும் வழிமுறையே ‘தியானம்’ எனப்படுகிறது. தியானத்தினால் மட்டுமே அது சாத்தியமாகிறது. எப்பொழுது ஆன்மா மனதை நிலைப்படுத்த நினைக்கிறதோ, அப்பொழுது தியானத்தை நாடுகிறது. அப்பொழுது பரம்பொருளானது, மனதை, விஸ்வசக்தி கொண்டும், விஸ்வ அறிவைக் கொண்டும் சுத்தம் செய்து மனதைக் கட்டுக்குள் கொண்டு வருகின்றது. இதனைத் தான், மோதிரவிரலும், பெருவிரலும் பெருவிரலால் பிடிக்கப்பட்டு, முத்திரையில் காட்டப்பட்டிருக்கும் தத்துவத்தின் அடிப்படை.

அதேபோல் முழுமை பெறாத புத்தியையும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் (நடுவிரல்). முழுமை பெறாத புத்தி என்பது அரைகுறை அறிவு ஆகும். அரைகுறை அறிவு என்பது மிகவும் ஆபத்தானது. அரைகுறை அறிவை முழுமையான அறிவால் மட்டுமே சரிசெய்ய இயலும். முழுமையான அறிவு பரம்பொருளே ஆகும்.

இதுதான், ‘பாபா முத்திரையில்’ நடுவிரல், பெருவிரலின் பிடியில் இருப்பதன் சாராம்சம் ஆகும். எப்பொழுது ஒருவர் ஞானம்பெற விரும்புகிறரோ, அப்போது அந்த விருப்பமே, தேடலே, அவரை தியானத்தின்பால் அழைத்துச் செல்கிறது.

எப்பொழுது ஒருவர் தியானத்தை இடைவிடாமல் பயிலுகின்றாரோ, அப்பொழுது பரம்பொருள் அவரது புத்தியை (உலகம் சார்ந்த புத்தி) தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து அதை முழுமை அடையச் செய்கிறது. இதையே நாம் ஞானம் என்கிறோம்.

உலகைச் சார்ந்த நிலையிலிருந்து புத்தி, ஞானமாக மாறும். இந்த ஆன்மிக மாற்றத்தை நாம் ‘ஞான யோகம்’ என்று கூறுகிறோம். இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் நாம் தியான யோகம் பயிலும்போது ஞானயோகம், இயல்பாகவும், தானாகவும் நிகழ்கிறது.

 

பாபா தத்துவத்தின் மொத்த சாராம்சம்

மோதிரவிரலை கட்டுக்குள் கொண்டு வந்தால் – தியான யோகம் (மனதை ஒழுங்குபடுத்துதல்)

நடுவிரலை கட்டுக்குள் கொண்டு வந்தால் – ஞானயோகம் (புத்தியை சீர் செய்தல்)

சாதாரண மனநிலையிலிருந்து ‘ஞான நிலையை’ நோக்கி பயணிப்பதே தியானம் எனப்படும். ஆன்மிக அல்லது ஞானமடைதல் என்பது இதுவே.